PUBLISHED ON : அக் 21, 2024 12:00 AM

அக்டோபர் 21, 2015
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூரில், 1933, ஜூன் 1ல் பிறந்தவர் வெங்கட் சாமிநாதன்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை யில் இருந்த தாய் மாமா வீட்டிலிருந்து நடுநிலை கல்வியையும், மதுரை, கும்பகோணம் பள்ளிகளில் மேல்நிலைப் படிப்பையும் முடித்து, ஒடிசாவில், ஹிராகுட் அணை கட்டும் ஊழியராக சேர்ந்தார். மத்திய அரசுப்பணிக்கான தேர்வு எழுதி, டில்லியில் பணி செய்தார். சி.சு.செல்லப்பாவின், 'எழுத்து' இதழில், கட்டுரைகளை எழுதினார்.
இவர் எழுதிய, 'பாலையும் வாழையும்' எனும் கட்டுரை விவாதமானது. பின், 'கசடதபற' இதழில் இலக்கிய விமர்சன கட்டுரைகளை எழுதினார். தொடர்ந்து, 'கால், அஃக், நடை, யாத்ரா' உள்ளிட்ட இதழ்களில் சினிமா, ஓவியம், நாட்டுப்புறவியல், அரசியல் உள்ளிட்ட விமர்சனங்களை எழுதினார்.
ஓய்வுக்குப் பின் சென்னை திரும்பிய இவரின் எழுத்துகளை, வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் எனும் பொருளில், 'வெசாஎ' என்ற இதழில், எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் வெளியிட்டார். இவர் திரைக்கதை எழுதிய, அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் தேசிய விருது பெற்றாலும், தமிழ் எழுத்தாளர்களால் பாராட்டையும், விமர்சனத்தையும் பெற்றார். 35 நுால்களை எழுதினார். இவர், தன், 82வது வயதில், 2015ல் இதே நாளில் மறைந்தார்.
விமர்சன தமிழ் வளர்த்த, 'வெ.சா' மறைந்த தினம் இன்று!