PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM

அக்டோபர் 22, 1925
திருநெல்வேலி மாவட்டம், பெருங்குளம் என்ற ஊரில், 1872, ஆகஸ்ட் 16ல், அனந்தராமய்யர் -- மீனாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்தவர்மாதவைய்யர்.
திருநெல்வேலியில் பள்ளிப் படிப்பையும், சென்னை கிறிஸ்துவகல்லுாரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். அதே கல்லுாரியில் ஆசிரியராகவும், ஆந்திராவின் கஞ்சம் மாவட்டத்தில் சுங்கத்துறை அதிகாரியாகவும் பணிபுரிந்தார்.
தன் நண்பர் சி.வி.சுவாமிநாத அய்யர் நடத்திய,'விவேக சிந்தாமணி' இதழில், 'சாவித்திரியின்கதை' என்ற தொடர் எழுதி பிரபலமானார். அதை,'முத்துமீனாட்சி' என்ற நுாலாக வெளியிட்டார். பின், 'பத்மாவதி சரித்திரம்' என்ற நாவலை இரண்டு பகுதிகளாக எழுதினார்.
'பஞ்சாமிர்தம்' என்ற இதழை துவக்கி, அதில், 'பத்மாவதி சரித்திரம்' நாவலின் மூன்றாம் பகுதியை எழுதினார். சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரை எழுதினார். கவிதை, நாடகம், தொடர்கதை, புதினம் உள்ளிட்ட இலக்கிய வகைகளை தன் எழுத்தில் கையாண்டார்.
சென்னை பல்கலை செனட் உறுப்பினரான இவர், 1925ல், தன், 53வது வயதில், இதே நாளில் மாரடைப்பால் மறைந்தார்; இவரது நினைவு தினம் இன்று!

