PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

அக்டோபர் 25, 1912
மதுரையில், எம்.எஸ்.ராமசாமி - சுப்புலட்சுமி தம்பதியின் மகனாக, 1912ல் இதே நாளில் பிறந்தவர் சுப்பிரமணியன் எனும் மதுரை மணி அய்யர்.
இவர், ராஜம் பாகவதர் மற்றும் மதுரை தியாகராஜ சங்கீத வித்யாலயாவில் கர்நாடக இசை பயிற்சி பெற்றார். எழுத்தாளர்களான தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி உள்ளிட்டோருடன் நெருங்கி பழகி, இலக்கிய ஆர்வலராக மாறினார்.
கர்நாடக இசை பாடகராக வளர்ந்த பின், இவரது மார்கழி கச்சேரிகளும், ஸ்ரீராம நவமி இசை நிகழ்ச்சிகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. சங்கீத கச்சேரிகளில் தெலுங்கு கீர்த்தனைகள் மட்டும் பாடப்பட்ட அக்காலத்தில் பாரதியார், பாபநாசம் சிவன் உள்ளிட்டோரின் தமிழ் பாடல்களை பாடினார்.
இவரது சிஷ்யர்களான ராஜம், சாவித்ரி கணேசன், வேம்பு அய்யர் உள்ளிட்டோரும் புகழ் பெற்றனர். இவரது திறமைக்கு, 'சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசை பேரறிஞர்' உள்ளிட்ட விருதுகள் கிடைத்தன. இவர், 1968, ஜூன் 8ல் தன் 56வது வயதில் மறைந்தார்.
ஸ்வரம், ராக ஆலாபனைகளுடன், நளினகாந்தி உள்ளிட்ட அபூர்வ ராகங்களையும் அசாத்தியமாக பாடிய இசைக் கலைஞர் பிறந்த தினம் இன்று!