PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM

அக்டோபர் 26, 1890
உத்தர பிரதேச மாநிலம், பதேபூர்மாவட்டத்தில் உள்ள ஹத்கான் என்ற ஊரில் ஆசிரியர் ஜெய் நரேனின் மகனாக, 1890ல், இதே நாளில் பிறந்தவர், கணேஷ் சங்கர் வித்யார்த்தி.
இவர், தன் தந்தையிடம் துவக்க கல்வியையும், ஹிந்து மத தர்மங்களையும் கற்றறிந்தார். உயர்நிலைப் பள்ளிகளில் படித்து, கான்பூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.
ஹிந்தி, உருது மொழிகளில் வெளியான,'தி சரஸ்வதி' இதழின் துணை ஆசிரியராக சேர்ந்தார்.அதேநேரம், அரசியல் பத்திரிகையான, 'அப்யுதயா'விலும்பணியாற்றினார். நாட்டு நடப்புகளை உற்று நோக்கிய இவர், ரேபரேலி விவசாயிகள், கான்பூர் ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதி சிறை சென்றார்.
மகாத்மா காந்தியை சந்தித்த பின், ஜவுளி தொழிலாளர்கள் போராட்டத்துக்கு தலைமை ஏற்றார். ஸ்வராஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி, கான்பூர்ஹிந்து - முஸ்லிம் கலவரத்தின்போது, சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, சமூக விரோதிகளால் கத்தியால் குத்தப்பட்டு, 1931, மார்ச் 25ல் தன் 41வது வயதில் மரணம் அடைந்தார்.
சிறந்த பத்திரிகையாளருக்கான ஜனாதிபதி விருதின் பெயரால், நினைவுகூரப்படுபவரது பிறந்த தினம் இன்று!