PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

அக்டோபர் 27, 1904
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1904ல் இதே நாளில்பிறந்தவர் ஜத்தின்தாஸ் எனும் ஜதீந்திர நாத் தாஸ். இவர், கோல்கட்டா வித்யாசாகர் கல்லுாரியில் படித்தார். அப்போதே, காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 'அனுசீலன் சமிதி' எனும் அமைப்பில் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார்.
இதற்காக கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில்அடைக்கப்பட்டார். லாகூர் சிறையில் பிரிட்டிஷ் கைதிகளுக்கு உயரிய உணவும், அளவற்ற சுதந்திரமும் வழங்கப்பட்ட நிலையில், இந்திய கைதிகளுக்கு கிழிந்த உடை, மோசமான உணவு, பூச்சிகள் மொய்க்கும் அறைகள் வழங்கப்பட்டன.
இந்திய விடுதலை போராட்ட கைதிகளின்உரிமைகளுக்காக, சிறையில் கிளர்ச்சி செய்தார். 1929, ஜூலை 13ல் உண்ணாவிரதம் துவங்கினார்.போலீசார் தொடர்ந்து துன்புறுத்திய போதும், உண்ணாவிரதத்தை, 63 நாட்கள் தொடர்ந்தார். இதனால், தன் 25வது வயதில், செப்டம்பர் 13ல், உரிமை கேட்டபடியே உயிர் விட்டார்.
லாகூரில் இருந்து கோல்கட்டா சென்ற இவரது இறுதி ஊர்வலத்தில், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டலட்சக்கணக்கானோர் பங்கேற்று, விடுதலை போராட்ட வீரர்களாக மாறினர். தன் மரணத்தால், சுதந்திர தாகத்தை ஊட்டிய மாவீரன் பிறந்த தினம் இன்று!