PUBLISHED ON : அக் 30, 2024 12:00 AM

அக்டோபர் 30, 1908
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், உக்கிரபாண்டி தேவர் - இந்திராணி தம்பதிக்கு மகனாக, 1908ல், இதே நாளில் பிறந்தவர் முத்துராமலிங்கம். ஒரு வயதுக்கு முன்பே தாய் காலமானதால், தன் பெரியம்மா மற்றும் பாட்டியிடம் வளர்ந்தார்.
பள்ளி பருவத்திலேயே ஆன்மிக ஈடுபாடு கொண்டிருந்தார். விவேகானந்தரை பின்பற்றி அரசியலில் நுழைந்தார். முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட இவரை எதிர்த்து, நீதிக் கட்சி ராமநாதபுரம் மன்னரை நிறுத்தியது; ஆயினும், இவர் வெற்றி பெற்றார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தலித்துகள் நுழைய துணை நின்றார்.
சுபாஷ் சந்திரபோஸின் பார்வர்டு பிளாக் கட்சியில்சேர்ந்து, இந்திய தேசிய ராணுவத்துக்கு இளைஞர்களை அனுப்பினார். பார்வர்டு பிளாக்கின் தமிழக தலைவர், எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிகளைவகித்தார்.
தொடர் பயணங்களால் உடல்நலம் குன்றிய இவர், 1963ல் தன் 55வது வயதில் இதே நாளில் மறைந்தார். பிறந்த நாளிலேயே மறைந்த முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி தினம் இன்று!

