PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

நவம்பர் 22, 1904
நாகை மாவட்டம், சாக்கை என்ற ஊரில், கோபால அய்யங்கார் - கோமளம்தம்பதிக்கு மகனாக, 1904ம் ஆண்டு, இதே நாளில் பிறந்தவர் ராஜம்.
கணக்கு தணிக்கை படிப்பை முடித்த இவர், சென்னையில், பிரிட்டிஷார் நடத்திய, 'மர்ரே' எனும் ஏல நிறுவனத்தில் பணிபுரிந்தார். விடுதலைக்குப் பின், அந்நிறுவனத்தை வாங்கி நடத்தியதால், மர்ரே ராஜம் என அழைக்கப்பட்டார்.
கடந்த 1940களில், பெ.நா.அப்புசாமி, இவருக்குதமிழறிஞர் வையாபுரி பிள்ளையை அறிமுகப்படுத்தினார். இவர், சாந்தி சாதனா அறக்கட்டளையைஉருவாக்கி, வையாபுரி பிள்ளையை பதிப்பாசிரியராக்கி,மு.சண்முகம் பிள்ளை, வி.மு.சுப்பிரமணிய அய்யர்,கி.வா.ஜகந்நாதன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ரா.பி.சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்களை குழுவாக்கி, தமிழ் இலக்கியங்களை பதிப்பித்து, மலிவு விலையில் வெளியிட்டார்.
'தமிழ் கல்வெட்டு சொல்லகராதி, வரலாற்று முறை தமிழ் இலக்கிய பேரகராதி, ராமாயணம், மஹாபாரதம்' உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நுால்களை வெளியிட்ட இவர், 1986, மார்ச் 13ல் தன் 82வது வயதில், காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!