PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

டிசம்பர் 8, 1944
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில்ராதாகிருஷ்ணன் - சாவித்ரி தம்பதியின்மகனாக, 1944ல் இதே நாளில் பிறந்தவர் விஜய்குமார் எனும் சசிகுமார்.
இவர், திருச்சி தேசிய கல்லுாரியில் பட்டம் பெற்றார். விமானப்படையில்சேர்ந்து, குறுகிய காலத்திலேயே தன் திறமையால் லெப்டினென்ட் ஆனார். சீன போரின்போது, பீரங்கி பிரிவிற்கு தலைமை ஏற்று எதிரிகளை விரட்டி, ஜனாதிபதி பதக்கம் பெற்றார்.
இசைக் கலைஞரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான தன் பாட்டி கோகிலவாணியிடம் இருந்து கலைகளை கற்ற இவரை, இயக்குநர் ஏ.பி.நாகராஜன்,திருமலை தென்குமரி திரைப்படத்தில் நடிகராக்கினார்.
தொடர்ந்து, அவள், வெள்ளிக்கிழமை விரதம், அகத்தியர், காசேதான் கடவுளடா, பாரத விலாஸ், ராஜபார்ட் ரங்கதுரை, சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். காமராஜர் தலைமையில் காங்கிரசில் இணைந்தார். 1974 ஆக., 24ல், வீட்டின் சமையலறையில் இவரது மனைவி தீ விபத்தில் சிக்க, காப்பாற்றசென்ற இவரும் சேர்ந்து உயிரிழந்தார். அப்போது, இவருக்கு, 30 வயது தான்.
இவரது பிறந்த தினம் இன்று!