PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

டிசம்பர் 24, 1939
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில் உள்ள இலக்கபுரத்தில், 1939ல் இதே நாளில் பிறந்தவர் இல.செ.கந்தசாமி.
இவர், தமிழ் புலவர், கலை முதுவர் பட்டங்களை பெற்று, தமிழாசிரியராகவும், கோவை வேளாண் பல்கலையில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். வேளாண் பல்கலை வெளியீடான, 'ஏர் உழவன், வளரும் வேளாண்மை' ஆகிய இதழ்களின் ஆசிரியராக பொறுப்பேற்று, விவசாயிகளுக்கு புரியும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து எழுதினார்.
'தன்னம்பிக்கை' என்ற மாத இதழை நடத்தி, இளைஞர்களுக்கு சாதிக்கும் ஆர்வத்தை துாண்டும் நுால்களை வெளியிட்டார். சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, பயண நுால்களை எழுதினார்.
'வேளாண்மையும் பண்பாடும், இந்த மண்ணின்மக்கள், ஓ... அன்றில் பறவைகளே, முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள், காலச்சுவடுகள், கீதாஞ்சலி மற்றும் சலனங்கள், சபலங்கள், மனிதர்கள்' உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ள இவர், 1992, ஏப்ரல் 6ல் தன் 52வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!