PUBLISHED ON : டிச 25, 2024 12:00 AM

டிசம்பர் 25, 1972
கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில், வெங்கடார்யா -- சிங்காரம்மா தம்பதியின் மகனாக, 1878 டிசம்பர் 10ல் பிறந்தவர் ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி.
ஓசூர், பெங்களூரில் பள்ளி படிப்பை முடித்தவர், சென்னையில்சட்டம் படித்து, வழக்கறிஞராக பணியாற்றினார். காங்கிரசில் இணைந்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அன்றைய மதராஸ் மாகாண முதன்மை அமைச்சரானார். சுதந்திர நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். கடந்த 1952 -- 1953ல் சென்னை மாகாண முதல்வராக இருந்தார்.
காங்கிரசின் சோஷலிச கொள்கையை எதிர்த்து, சுதந்திரா கட்சியை துவக்கி, 1967 சட்டசபை தேர்தலில் அண்ணாதுரையை ஆதரித்து முதல்வராக்கினார். இவர் எழுதிய, 'சக்கரவர்த்தி திருமகன்' நுாலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'பாரத ரத்னா' உள்ளிட்ட விருதுகள் பெற்றவர், 1972ல் தன் 94வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...' பாடலை இயற்றிய மூதறிஞர் மறைந்த தினம் இன்று!

