PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM

ஜனவரி 4, 1892
பொதுப்பணி துறையில் பணியாற்றிய சாலமன் துரைசாமி கொர்னேலியஸ் - எஸ்தர் தம்பதியின் மகனாக, 1892ல், இதே நாளில் தஞ்சையில் பிறந்தவர் ஜோசப் செல்லதுரை கொர்னேலியஸ் எனும் ஜே.சி.குமரப்பா.
இவர், சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் பொருளாதாரம், லண்டனில், 'சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ்' படித்தார். அமெரிக்காவில் ஆய்வு படிப்பை முடித்தார். இவர் எழுதிய, 'இந்தியா ஏன் வறுமையில் உழல்கிறது?' என்ற ஆய்வு கட்டுரையால், பிரபலமானார்.
அந்த நுாலுக்கு முன்னுரை எழுதிய காந்தியின் நண்பரானார். காந்தி, தண்டி யாத்திரை சென்ற போது, 'யங் இந்தியா' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இவர் எழுதிய கட்டுரைகளால் தடுமாறிய பிரிட்டிஷ் அரசு, இவரை மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது.
அகில பாரத கிராம தொழில்கள் சங்க செயலராகி, இயற்கை விவசாயம், கிராம தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்ட இவர், தன் 68வது வயதில், 1960 ஜனவரி 30ல் மறைந்தார்.
இவர் பிறந்த தினம் இன்று!

