PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

ஜனவரி 7, 1987
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில்,மருத்துவர் சீனிவாசன் - பட்டம்மாள் தம்பதிக்கு மகளாக 1921 மார்ச் 21ல் பிறந்தவர் திரிபுரசுந்தரி எனும் லட்சுமி. இவர், சென்னையில் மருத்துவம் படித்தார். அப்போது, இரண்டாம் உலக போர் காரணமாக நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, லட்சுமி குடும்பத்திலும் எதிரொலித்தது.
படிப்பை கைவிட மனமின்றி, ஆனந்த விகடன் ஆசிரியர் வாசனை சந்தித்து, தன் படிப்பு தொடர உதவும்படி வேண்டினார். லட்சுமி எழுதும் கதைகளை விகடனில் தொடர்ந்து வெளியிட்டு பண உதவி செய்வதாக வாசன் தந்த உறுதிமொழியால், 'தகுந்த தண்டனையா?' என்ற தன் முதல் சிறுகதையை எழுதினார்.
தொடர்ந்து, பல கதைகளை எழுதினார். பெண்மையின் மெல்லிய உணர்வுகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், போராட்டங்கள், வெற்றி, தோல்விகளை நுணுக்கமாக சித்தரித்தார். கண்ணபிரான் என்பவரை காதல் திருமணம் செய்து, தென்னாப்ரிக்கா சென்று மகப்பேறு மருத்துவ பணி செய்தார்.
கணவர் மறைவுக்கு பின் சென்னை வந்து, தொடர்ந்து எழுதினார். 'ஒரு காவிரியை போல' என்ற நுாலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர், 1987ல் தன், 66வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

