PUBLISHED ON : ஜன 16, 2025 12:00 AM

ஜனவரி 16, 1931
ஜார்க்கண்ட் மாநிலத்தில், பெங்காலி பிராமண தம்பதியின் மகனாக, 1931ல் இதே நாளில் பிறந்தவர் சுபாஷ் முகர்ஜி. இவர், கோல்கட்டா தேசிய மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்தார்.
ராஜாபஜார் அறிவியல் கல்லுாரி, எடின்பர்க் பல்கலையில், இனப்பெருக்கச் செயலியல் சுரப்பியலில், பிஎச்.டி., முடித்தார். என்.ஆர்.எஸ்., மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். மகப்பேறு டாக்டர் சரோஜ் காந்தி பட்டாச்சார்யாவுடன் இணைந்து, 1978, அக்டோபர் 3ல், சோதனை குழாய் குழந்தையை பிறக்க வைத்தார்.
துர்கா பூஜையன்று பிறந்ததால் துர்கா என பெயரிட்டார். அதற்கு 78 நாட்களுக்கு முன், பிரிட்டனில் உலகின் முதல் சோதனை குழாய் குழந்தை பிறந்தது. பிரிட்டன் டாக்டர்களின் முறைக்கு மாறான முறையில் இவர் சாதித்தார். இதை வெளிநாட்டு டாக்டர்களும், இந்திய அரசும் புறக்கணித்தன. இது பற்றி எழுதவும், பேசவும் அனுமதி மறுக்கப்பட்டதால், மனமுடைந்த இவர் தன் 50வது வயதில், 1981, ஜூன் 19ல் தற்கொலை செய்து கொண்டார்.
உலகம் வியக்கும் கரு முட்டை சேமிப்பு, செயற்கை கருத்தரித்தலை கண்டறிந்த டாக்டர் பிறந்த தினம் இன்று!

