PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

ஜனவரி 19, 2011
விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் கிராமத்தில், வீராசாமி - பாஞ்சாலி தம்பதியின் மகனாக, 1934, ஜூலை 2ல் பிறந்தவர் தாமரைக்கண்ணன் எனும் ராஜமாணிக்கம்.
இவர், சென்னை, புதுச்சேரி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை களில் முதுகலை தமிழ் மற்றும் முனைவர் பட்டங்களை பெற்று, ஆசிரியராக பணியாற்றினார். பல்வேறு இதழ்களில் எழில், அன்பெழிலன், கண்ணன் உள்ளிட்ட புனை பெயர்களில் நாவல், சிறுகதை, கட்டுரைகள் எழுதினார்.
இவரது, 'அத்திப்பூ' நாடகம், பிளஸ் 1 வகுப்பிலும்; 'கிள்ளிவளவன்' நாடகம், பிளஸ் 2 வகுப்பிலும் துணை பாடங்களாக இருந்தன.'சங்கமித்திரை' நாடகம், தமிழக அரசின் சிறந்த நுால் பரிசை பெற்றது. வரலாறு, தொல்லியல் மீது ஆர்வமுள்ள இவர், கல்வெட்டு படியெடுப்பதிலும், பழங்கால எழுத்துகளை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர்.
பல கோவில்களின் கட்டடக்கலை, செப்பு படிமங்களின் வரலாற்றை ஆய்வரங்க கட்டுரைகளின் வாயிலாக வெளிப்படுத்திய இவர், 2011ல் தன் 76வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

