PUBLISHED ON : ஜன 21, 2025 12:00 AM

ஜனவரி 21, 1955
சென்னை, மயிலாப்பூரில் முத்து ஸ்வாமி அய்யர் - கனகம் தம்பதியின் மகனாக, 1955ல் இதே நாளில் பிறந்தவர் பிரகாஷ் எம்.ஸ்வாமி. அமெரிக்காவின், யுனிவர்சிட்டி ஆப் புளோரிடாவில் இதழியல் படிப்பை முடித்து, தி நியூயார்க் டைம்சில், 1988ல் செய்தியாளராக பணியாற்றினார்.
'தி ஹிந்து, இந்தியா டுடே' ஆங்கில பத்திரிகைகளில் சீனியர் எடிட்டராக பணியாற்றிய இவர், ஆனந்த விகடன் குழுமத்தில் நிர்வாக ஆசிரியராக, பணியாற்றினார். முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல் மனித வெடிகுண்டால் தான் கொல்லப்பட்டார் என்பதை, தடய அறிவியல் ஆதாரங்களுடன் இவர் நிரூபித்ததால், இந்திய புலனாய்வு செய்தியாளர்களின் முன்னோடியாக கருதப்படுகிறார்.
ஐ.நா.,வில் சர்வதேச பத்திரிகையாளராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். அமெரிக்க தமிழ்ச்சங்க நிறுவனர், எம்மி விருது குழுவின் நடுவர் போன்ற பல பெருமைகளை பெற்ற இவருக்கு, தமிழக அரசு, 2019ல் கலைமாமணி விருது வழங்கியது.
இவரது, 70வது பிறந்த தினம் இன்று!

