PUBLISHED ON : ஜன 28, 2025 12:00 AM

ஜனவரி 28, 1925
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், திப்டூரில் நீதிபதி பி.ராமண்ணா - ருக்மணியம்மா தம்பதியின் மகனாக, 1925ல் இதே நாளில் பிறந்தவர் ராஜா ராமண்ணா.
கர்நாடகாவில் பள்ளி படிப்பு, சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் இயற்பியல் பட்டம், லண்டன் அரசர் கல்லுாரியில் பிஎச்.டி., ராயல் இசை பள்ளியில் இசை ஆகியவற்றை கற்றார்.
டாடா பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, அணுக்கரு பிளவு, அணுக்கரு சிதறல் பற்றிய ஆய்வுகளை செய்தார். ஹோமி பாபாவின் ஆய்வுக்குழுவில் இளம் ஆய்வாளராக சேர்ந்து, 'அப்சரா' அணு உலை உருவாக்கத்தில் பங்கேற்றார்; தொடர்ந்து, நியூட்ரான்களை ஆய்வு செய்தார்.
ஐ.ஐ.டி.,க்கள், தேசிய அறிவியல் கழகங்களின் தலைவர், பாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் இயக்குனர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். பிரதமர் இந்திரா உத்தரவுப்படி, 1974ல் நடந்த அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு பின், ராஜ்யசபா எம்.பி.,யாகி, பாதுகாப்பு அமைச்சராகவும் உயர்ந்தார். 'பத்மஸ்ரீ, பத்ம பூஷண்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2004 செப்டம்பர் 24ல் தன் 79வது வயதில் மறைந்தார்.
அணு ஆயுதங்களுக்கான எரிபொருளை தயாரித்த அணு விஞ்ஞானி பிறந்த தினம் இன்று!

