PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM

ஜனவரி 29, 1980
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில், வெள்ளையன் ஆசாரி - ராஜவடிவு தம்பதியின் மகனாக, 1920ல் பிறந்தவர் எஸ்.வி.சுப்பையா.
செங்கோட்டையில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர், செங்கோட்டை ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நடிக்க துவங்கினார். பின், சண்முகானந்தா சபை, சக்தி நாடக சபா உள்ளிட்ட குழுக்களில் இணைந்து நடித்தார். சக்தி நாடக குழுவில், எஸ்.டி.சுந்தரம் எழுதிய, 'கவியின் கனவு' நாடகத்தில் மகாகவி ஆனந்தனாக நடித்து புகழ் பெற்றார்.
விஜயலட்சுமி என்ற படத்தில் அறிமுகமாகி, கஞ்சன், அபிமன்யு, காலம் மாறி போச்சு, பார்த்திபன் கனவு, பாவ மன்னிப்பு உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடம் ஏற்று நடித்தார். கப்பலோட்டிய தமிழன் படத்தில், பாரதியாராக நடித்தார். அம்பாள் புரொடக் ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, காவல் தெய்வம் படத்தை எடுத்தார். அதில், சிவாஜி, முத்துராமன், பாலையா, நம்பியார், நாகேஷ், வி.கே.ராமசாமி உள்ளிட்டோரை நடிக்க வைத்தார்.
சென்னை, செங்குன்றம் அருகில் உள்ள காரனோடையில் நிலம் வாங்கி விவசாயம் செய்தவர், தன் 60வது வயதில், 1980ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

