PUBLISHED ON : ஜன 30, 2025 12:00 AM

ஜனவரி 30, 1910
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் உள்ள செங்குட்டைப்பாளையம் கிராமத்தில், சிதம்பர கவுண்டரின் மகனாக, 1910ல் இதே நாளில் பிறந்தவர் சி.சுப்பிரமணியம்.
இவர், அரசு பள்ளி, சென்னை மாநிலக் கல்லுாரி, சென்னை சட்டக்கல்லுாரிகளில் படித்தார். காங்கிரசில் சேர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1952 - 62 வரை, தமிழகத்தில் கல்வி, சட்டம் மற்றும் நிதியமைச்சராக இருந்தார்.
கடந்த 1962ல் எம்.பி.,யாகி, மத்திய காங்., அரசில் இரும்பு, சுரங்கம், உணவுத் துறைகளின் அமைச்சர், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் பொறுப்புகளை வகித்தார். நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, எம்.எஸ்.சுவாமிநாதன், சிவராமன் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் வாயிலாக, புதிய நெல் ரகங்களை அறிமுகம் செய்து உற்பத்தியைப் பெருக்கினார்.
தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத் துக்கு ஆதரவாக, தன் பதவியை ராஜினாமா செய்தார். 1990ல், மஹாராஷ்டிர கவர்னர் ஆனார். நாட்டின் மிக உயரிய விருதான, 'பாரத ரத்னா' பெற்ற இவர், தன் 90வது வயதில், 2000வது ஆண்டு, நவம்பர் 7ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

