PUBLISHED ON : பிப் 01, 2025 12:00 AM

பிப்ரவரி 1, 2003
ஹரியானா மாநிலம், கர்னல் கிராமத்தில், பனாரசி லால் சாவ்லா - சஞ்ஜோதி சாவ்லா தம்பதியின் மகளாக, 1962, மார்ச் 17ல் பிறந்தவர் கல்பனா சாவ்லா. இவர், பள்ளியில் படித்தபோது, இந்தியாவின் சிறந்த பைலட்டும், தொழில் அதிபருமான ஜே.ஆர்.டி.டாடாவை பார்த்து, இவரும் விமானம் ஓட்ட தீர்மானித்தார். பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லுாரி,அமெரிக்காவின் டெக்சாஸ், கொலராடோ பல்கலைகளில் விமான பொறியியல் படித்தார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் சேர்ந்து, பல்வேறு ஆய்வுகளில் பங்கேற்றார். 'ஓவர்செட் மெத்தட்ஸ்' நிறுவனத்தின் விஞ்ஞானியாக சேர்ந்து, விண்வெளி வீராங்கனை தேர்வுகளை முடித்தார்.
கடந்த 1997ல் எஸ்.டி.எஸ்., 87 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து திரும்பினார். 2003, ஜனவரி 16ல் மீண்டும் விண்வெளிக்கு பறந்து, பல்வேறு ஆய்வுகளை முடித்தார். பூமிக்கு திரும்பியபோது பிப்ரவரி 1ல், தரையிறங்க 15 நிமிடங்கள் இருந்த சூழலில் விண்கலம் வெடித்ததில், உடனிருந்த ஆறு பேருடன் இவரும் உயிரிழந்தார்; அப்போது, இவரது வயது 40.
இந்திய சாதனைப் பெண்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயரால் வாழும் வீரமங்கை மறைந்த தினம் இன்று!