PUBLISHED ON : பிப் 02, 2025 12:00 AM

பிப்ரவரி 2, 2023
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரேபள்ளேயில், காசிநாதுனி சுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதியின் மகனாக, 1930, பிப்ரவரி 19ல் பிறந்தவர் கே.விஸ்வநாத்.
இவர், குண்டூர் ஹிந்து கல்லுாரி, ஆந்திர பல்கலை, ஆந்திர கிறிஸ்துவ கல்லுாரிகளில் படித்தார். சென்னை வாஹினி ஸ்டூடியோவில், ஒலிப்பொறியாளர் ஏ.கிருஷ்ணாவிடம் ஒலிப்பதிவாளராக பணியில் சேர்ந்தார்; படிப்படியாக சினிமா கலையை கற்றார்.
கடிகுண்டலு திரைப்படத்துக்கு கதை எழுதினார். ஆத்ம கவுரவம், ஓ சீத கதா, ஜீவன் ஜோதி உள்ளிட்ட தெலுங்கு படங்களை இயக்கினார். இவர் இயக்கிய, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்டவை வெற்றி படங்களாகின.
குருதிப்புனல், பாசவலை, சிங்கம் - 2, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதுகளை ஐந்து முறை பெற்றார். 'பத்மஸ்ரீ, நந்தி, தாதா சாகேப் பால்கே' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 2023ல் இதே நாளில், தன் 93 வயதில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!