PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

பிப்ரவரி 4, 1943
பிரபல திரைப்பட இயக்குனர் கே.சுப்ரமணியம் -- இசையமைப்பாளர் மீனாட்சி தம்பதிக்கு மகளாக, சென்னை சாந்தோமில், 1943ம் ஆண்டு, இதே நாளில் பிறந்தவர் பத்மா.
இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்றார். பி.வி.லட்சுமண், சலில் சவுத்ரியிடம் இசை கற்றார். இசையில் இளங்கலை; மரபிசையில் முதுகலை; நாட்டியத்தில் பிஎச்.டி., முடித்தார். நம் நாட்டு புராணம், இதிகாசம் உள்ளிட்ட சரித்திர சம்பவங்களுக்கும், வெளிநாட்டு சரித்திர சம்பவங்களுக்கும் இசையமைத்து பாடி, தனியாகவும், குழுவாகவும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார்.
மத்திய அரசின் கலை, கலாசார துாதுவராகி, நாட்டின் பாரம்பரிய கலைகளை வெளிநாடுகளில் பரப்பினார். ராஜராஜ சோழனின் ஆயிரமாவது சதய விழாவில், 1,000 நாட்டியக் கலைஞர்களுடன், தஞ்சை பெரிய கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். 'பத்மபூஷன்' உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
கலைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, பத்மா சுப்ரமணியத்தின், 82வது பிறந்த தினம் இன்று!