PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

பிப்ரவரி 5, 2000
-சங்கீத வித்வானாக திகழ்ந்த கோவிந்தராஜுலுவின் மகனாக, 1927, ஆகஸ்ட் 22ல் திருச்சியில் பிறந்தவர் டி.ஜி.லிங்கப்பா. இவர், சிறு வயதிலேயே நாடகங்களில் ஹார்மோனியம் வாசித்தார்.
'மயூரா' எனும் சினிமா ஆர்க்கெஸ்ட்ராவில் இணைந்து, ஹார்மோனியம், மாண்டலின், கிடார் வாசித்தார். சி.ஆர்.சுப்பராமனின் உதவியாளர் ஆனார். அவர் இறந்த பின், மோகன சுந்தரம் படத்துக்கு இசையமைத்தார். அதில் நடிகர் சந்திரபாபு, 'ஹலோ மை டியர் டார்லிங்...' பாடலை பாடி, பாடகரானார்.
தொடர்ந்து, சின்னதுரை, விளையாட்டு பொம்மை, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, முதல் தேதி உள்ளிட்ட படங்களின் வாயிலாக இசை பயணத்தை தொடர்ந்த லிங்கப்பாவுக்கு, டி.ஆர்.மகாலிங்கமும், பி.ஆர்.பந்துலுவும் உதவினர்.
இவரின் இசையில் வெளியான, 'அமுதை பொழியும் நிலவே, சித்திரம் பேசுதடி, என் அருமை காதலிக்கு' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் காதுகளில் தேன் பாய்ச்சுகின்றன. தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த இவர், 2000வது ஆண்டு, தன் 73வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!