PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

பிப்ரவரி 6, 1884
புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு ஒன்றியம், இளையான்குடியில், 1884ம் ஆண்டு, இதே நாளில் பிறந்தவர் அரங்கசாமி நாயக்கர். சுயமரியாதை கொள்கை கொண்ட இவர், திருநள்ளாறு நகராட்சித் தலைவராக இருந்தார்.
ஜாதிய பாகுபாடுகளை எதிர்த்து, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடினார். அவர்களின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க, பல கிணறுகளை வெட்டினார்.
நண்பர்களுடன் இணைந்து, 'பிரெஞ்சிந்திய குடியரசு' என்ற வார இதழை துவக்கி, அதன் ஆசிரியரானார். புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு அரசின் ஜனநாயக விரோதக் கொள்கைகள் மற்றும் காலனித்துவ அத்துமீறல்களை அதில் எழுதினார்.
மஹாத்மா காந்தி புதுச்சேரி வந்த போதெல்லாம் தன் வீட்டில் தங்க வைத்தார். நாடு சுதந்திரம் பெற்றபோது, திருமலைராயன்பட்டினம் நகராட்சியில், இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். அதற்கு தண்டனையாக, இவரது நகராட்சித் தலைவர் பதவியை, பிரெஞ்சு அரசு இடைநீக்கம் செய்தது.
தொடர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, 'பிரெஞ்சிந்திய காந்தி' எனும் பட்டத்தை பெற்ற இவர், 1948, ஜனவரி 6ல் தன் 64வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!