PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM

பிப்ரவரி 7, 1864
தஞ்சை மாவட்டம், பழமார்நேரியில், சுந்தரம் அய்யர் - சுப்புலட்சுமி தம்பதியின் மகனாக, 1864, இதே நாளில் பிறந்தவர் பி.எஸ்.சிவசாமி அய்யர். இவர் பள்ளிப் படிப்பை முடித்து, கும்பகோணம் அரசு கலை கல்லுாரி, சென்னை மாநிலக் கல்லுாரி களில் இளங்கலை சமஸ்கிருதம், வரலாறு படித்த பின், சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டம் படித்து, வழக்கறிஞர் ஆனார்.
சென்னை பல்கலையின் செனட் உறுப்பினராகி, துணைவேந்தராக உயர்ந்தார். சென்னை மாகாண கவர்னர் நியமன சபை உறுப்பினராக இருந்தார். தாய்மொழிக் கல்விக்கு ஆதரவளித்த இவர், சட்டம், சமூகம், அரசியல், பொருளாதாரம், ராணுவம், சர்வதேச சட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
சென்னை விவேகானந்தா கல்லுாரி, சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள உயர்நிலைப்பள்ளி உள்ளிட்டவை நிதியின்றி தவித்தபோது, நன்கொடை அளித்து காத்தார். இவர், 1946, நவம்பர் 5ல் தன் 82வது வயதில் மறைந்தார்.
தன் வீட்டை விற்று பள்ளிக்கு தந்த, 'கல்வி வள்ளல்' பிறந்த தினம் இன்று!

