PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

பிப்ரவரி 11, 1979
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், வழுவூரில், 1912, மே 12ல் பிறந்தவர் கோவிந்தராஜ். இவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, தன் தாய்மாமாவும், பிரபல நாதஸ்வர வித்வானுமான, திருவிடைமருதுார் பி.எஸ்.வீருசாமியிடம் வளர்ந்தார்.
பள்ளி படிப்பின்போதே, சிமிழி சுந்தரம், மாயவரம் பூதலிங்கம் உள்ளிட்டோரிடம் கர்நாடக இசையை கற்றார். வயலின் கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் முன் பாடினார். அந்த பாடலில் இவர் நிகழ்த்திய புதுமையை மெச்சி, ராஜமாணிக்கம் இவரை, தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.
அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், ஆலத்துார் சகோதரர்கள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், சித்துார் சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை மணி ஆகியோருக்கு வயலின் வாசித்தார். திருவனந்தபுரம் அரண்மனை வித்வானாக இருந்தார்.
அண்ணாமலை பல்கலையின் இசை கல்லுாரி தலைவர்; திருச்சி, சென்னை வானொலி நிலையங்களின் இசைத்துறை தேர்வு குழு உறுப்பினராக இருந்தார். 'கலைமாமணி, இசை பேரறிஞர்' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், தன் 67வது வயதில், 1979ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

