PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

பிப்ரவரி 12, 2013
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாருக்கு அருகில் உள்ள செங்கற்பட்டை கிராமத்தில், சங்கரலிங்கத்தின் மகனாக, 1914ல் பிறந்தவர் ஜெகந்நாதன்.
இவர், ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லுாரி ஆகியவற்றில் படித்தார். பெங்களூரில் பட்டியலின மக்களுக்காக சேவை செய்தார். அங்கு, சமூக சேவகி கிருஷ்ணம்மாளை மணந்தார். இருவரும் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தை பின்பற்றி, நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து நிலங்களை தானம் பெற்று, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கினர்.
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது ஊர்வலம் சென்றதற்காக, 15 மாத சிறை தண்டனை பெற்றார். நாகை மாவட்டம், கீழவெண்மணி படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கிடைக்க வழி செய்த இவர், தன் 99வது வயதில், 2013ல் இதே நாளில் மறைந்தார்.
நோபல் பரிசுக்கு இணையான, 'ரைட் லைவ்லி குட்' விருது பெற்ற தமிழக தியாகி மறைந்த தினம் இன்று!

