PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

பிப்ரவரி 14, 1901
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பித்ரகுன்டாவில், 1901ல் இதே நாளில் பிறந்தவர் பிச்சு சாம்பமூர்த்தி.
இவர், பி.ஏ., - பி.எல்., படித்தார். பொத்து கிருஷ்ணய்யா, எம்.துரைசாமி அய்யர், எஸ்.ஏ.ராமசாமி அய்யர், கிருஷ்ணசாமி பாகவதர் உள்ளிட்டோரிடம் கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு மற்றும் வயலின் இசையை கற்றார். சென்னை ராணிமேரி கல்லுாரியில் இசை ஆசிரியராக சேர்ந்தார்.
ஜெர்மனிக்கு சென்று மேற்கத்திய இசை உள்ளிட்டவற்றை, கர்நாடக சங்கீத வரையறைகளுடன் பொருத்தி ஆய்வுகள் செய்தார். நாடு திரும்பி, சென்னை பல்கலையில் விரிவுரையாளராக சேர்ந்தார்; அங்கேயே, இசை பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலையில் இசை பேராசிரியராக இருந்தார். தன் அனுபவங்களை மாணவர்களுக்கு பயன்படும் வகையில், 50க்கும் மேற்பட்ட நுால்களாக எழுதினார். 'சங்கீத கலா சிகாமணி, சங்கீத கலாநிதி, பத்ம பூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1973, அக்டோபர் 23ல் தன் 72வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

