PUBLISHED ON : பிப் 16, 2025 12:00 AM

பிப்ரவரி 16, 1978
காஞ்சிபுரத்தில், சி.கே.பெத்தசாமி நாயுடு - லட்சுமி தம்பதியின் மகனாக, 1906, ஏப்ரல் 11ல் பிறந்தவர் சின்னராஜ் எனும் சி.பி.சிற்றரசு.
இவர், படிப்பை முடித்ததும் நீதிக் கட்சியில் சேர்ந்து, அண்ணாதுரையுடன் பணியாற்றினார். தி.மு.க.,வை அண்ணாதுரை துவக்கிய போது அதில் இணைந்தார். 'தீப்பொறி, தீச்சுடர்' இதழ்களின் நிறுவனராகவும், 'இன முழக்கம், நம் நாடு' இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றினார். சட்ட மேல்சபை உறுப்பினர், அவை தலைவர் பதவிகளை வகித்தார். அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கிய போது, அதில் இணைந்தார். 'சரிந்த சாம்ராஜ்யங்கள், சாய்ந்த கோபுரம்' உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியவர், தன் 72வது வயதில், 1978ல் இதே நாளில் மறைந்தார். வேலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு சி.பி.சிற்றரசு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரது நினைவு தினம் இன்று!

