PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

பிப்ரவரி 19, 1855
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள உத்தமதானபுரத்தில், வேங்கடசுப்பு அய்யர் - சரஸ்வதி தம்பதிக்கு மகனாக, 1855ல், இதே நாளில் பிறந்தவர் சாமிநாதன்.
சிறுவயதிலேயே தமிழில் பேரார்வம் கொண்டிருந்த இவர், 17 முதல் 22 வயது வரை, திருவாவடுதுறை ஆதீனத்தின், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார். பின், கும்பகோணம் அரசு கல்லுாரி ஆசிரியரானார். தொடர்ந்து, சென்னை மாநில கல்லுாரியில், 16 ஆண்டுகள் பேராசிரியராக இருந்தார்.
அப்போது, தமிழகம் முழுதும் அலைந்து, 3,000க்கும் மேற்பட்ட பழந்தமிழ் சுவடிகளை சேகரித்தார்; 1887ல், 'சிந்தாமணி'யை பதிப்பித்தார். தமிழ் சுவடிகளை தேடி அலைந்த அனுபவங்களை, 'என் சரித்திரம்' என்ற தொடராக ஆனந்த விகடனில் எழுதினார். 'முனைவர், மகாமகோபாத்தியாய, தக் ஷிண கலாநிதி' உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர், தன் 87வது வயதில், 1942 ஏப்ரல் 28ல் மறைந்தார்.
'தமிழ் தாத்தா' உ.வே.சா., பிறந்த தினம் இன்று!

