PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

பிப்ரவரி 20, 1960
காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வளூரில், வெங்கடாச்சாரி - பட்டம்மாள் தம்பதிக்கு மகளாக, 1901, டிசம்பர் 1ல் பிறந்தவர் கோதைநாயகி.
தன், ஐந்தரை வயதில், 9 வயதான வைத்தமாநிதி முடும்பை பார்த்தசாரதி என்பவரை மணந்தார். சிறு வயதிலேயே பாடுவதிலும், கதை சொல்வதிலும் சிறந்தவரான இவர், தன் தோழி பட்டம்மாளிடம் கதை சொல்லி, அதை எழுத சொன்னார். பின், அவரிடமே எழுத, படிக்கக் கற்று, கதைகளையும், நாடகங்களையும் எழுதினார். அவை, பல இதழ்களில் வெளியாகின.
காந்திய வழியில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சுதந்திரத்துக்குப் பின், திரைப்பட தணிக்கை துறையில் பணியாற்றினார். இவரின், 'அனாதைப்பெண், சித்தி' உள்ளிட்ட கதைகள் திரைப்படங்களாகின. காங்கிரஸ் வழங்கிய 10 ஏக்கர் நிலத்தை, வினோபாவேயிடம் தானமளித்தார். இவர், தன் 58வது வயதில், 1960ல், இதே நாளில் மறைந்தார்.
வை.மு.கோதைநாயகியின் நினைவு தினம் இன்று!

