PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM

பிப்ரவரி 21, 1894
பிரிட்டிஷ் இந்தியாவின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பேராவில், பரமேஸ்வரின் மகனாக, 1894ல், இதே நாளில் பிறந்தவர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் எனும் எஸ்.எஸ்.பட்நாகர்.
தந்தையை இழந்து, தாய்வழி தாத்தாவிடம் வளர்ந்தார். ஷாபூர் ஆங்கிலோ சமஸ்கிருத உயர்நிலை பள்ளியில் படித்தார். தனிமையில் தவித்த இவர், தன் தாத்தாவின் நுாலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் படித்தார். சிறுவயதிலேயே அறிவியல் கருவிகளின் வடிவியல், இயற்கணிதம், இலக்கியம் உள்ளிட்டவற்றை கற்றார்.
பல நாடுகளில் பட்ட படிப்புகளை முடித்தார். நாடு திரும்பி, அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநராக பணியாற்றி, நாட்டில், 12 தேசிய ஆய்வகங்களை நிறுவினார். யு.ஜி.சி.,யின் தலைவர், மத்திய அரசின் கல்வி ஆலோசகர், அணுசக்தி ஆணைய செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.
பிரிட்டிஷ் அரசின், 'நைட்' பட்டம், மத்திய அரசின் பத்ம விபூஷன் விருதுகளை பெற்ற இவர், தன், 61வது வயதில், 1955, ஜனவரி 1ல் மறைந்தார்.
பல பல்கலைகள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பெயரால் நிலைத்துள்ள, எஸ்.எஸ்.பி., பிறந்த தினம் இன்று!

