PUBLISHED ON : மார் 28, 2025 12:00 AM

மார்ச் 28, 1943
புதுக்கோட்டை மாவட்டம், செம்மனாம்பொட்டல் கிராமத்தில், சுந்தரேச சாஸ்திரி - சுப்புலட்சுமி தம்பதியின் மகனாக, 1887, ஆகஸ்ட் 19ல் பிறந்தவர் சத்தியமூர்த்தி.
இவர், சென்னை கிறிஸ்துவக் கல்லுாரி, சட்டக் கல்லுாரிகளில் படித்தபோது, கல்லுாரி மாணவர் தேர்தலில் வென்று, வங்கப் பிரிவினைக்கு எதிராகப் போராடினார். 1936ல் தமிழக காங்கிரஸ் தலைவராகி, காமராஜரை செயலராக்கினார்; 1939ல் சென்னை மேயர் ஆனார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஏற்பட்ட சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசிடம் போராடி, பூண்டி நீர்த்தேக்கம் கட்ட அடிக்கல் நாட்டினார். 1942ல் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீசார் தாக்குதலால் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில், தன் 55வது வயதில், 1943ல் இதே நாளில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் சிஷ்யரான காமராஜர் முதல்வராகி, பூண்டி நீர்த்தேக்கத்துக்கும், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கும் இவரது பெயரை சூட்டினார்.
'தீரர்' சத்தியமூர்த்தியின் நினைவு தினம் இன்று!

