PUBLISHED ON : ஜூலை 02, 2025 12:00 AM

ஜூலை 2, 1945
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அருகில் முத்துப்பேட்டை கிராமத்தில், கிறிஸ்துவ வேளாளர் சமூகத்தை சேர்ந்த சேனாதிபதி பிள்ளையின் மகனாக, 1945ல் இதே நாளில் பிறந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
சென்னையில், அரசு ஊழியராக இருந்த இவர், விஜயா வாஹினி ஸ்டூடியோவில் சவுண்டு இன்ஜினியராக பணி செய்து, டி.என்.பாலுவிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, நான் ஆணையிட்டால், வசந்த மாளிகை உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக உயர்ந்தார்.
வெற்றி, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை உள்ளிட்ட புரட்சிகர படங்களை இயக்கி, இளைஞர்களின் இயக்குநராக அறியப்பட்டார். விஜயகாந்த் நடிப்பிலும், கருணாநிதி கதையிலும் நிறைய படங்களை இயக்கினார்.
இவர், தன் மகன் விஜயை நடிகராக்கி, நாளைய தீர்ப்பு, பெரியண்ணா, ஒன்ஸ்மோர், மாண்புமிகு மாணவன், விஷ்ணு, தேவா, ரசிகன், செந்துாரபாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கி, அவருக்கு ராஜபாட்டை அமைத்து கொடுத்தார். ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களையும் இயக்கியவர், சில படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது 80வது பிறந்த தினம் இன்று!
