PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

ஜூலை 3, 1948
தஞ்சாவூர் மாவட்டம், உறந்தைராயன் குடிக்காடு எனும் கிராமத்தில், கோவிந்தசாமி - அமிர்தம் தம்பதியின் மகனாக, 1948ல் இதே நாளில் பிறந்தவர் இளவழகன். இவர் பள்ளியில் படித்தபோதே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, 48 நாட்கள் சிறையில் இருந்தார். 'ஊர் நலன் வளர்ச்சி கழகம், தமிழர் உரிமை கழகம்' எனும் அமைப்புகளை ஏற்படுத்தி, சமூக பணிகளில் ஈடுபட்டார்.
மின்வாரிய ஊழியராக பணியாற்றிய இவர், தேவநேய பாவாணரின் பெயரில் மன்றம் அமைத்து, தனித்தமிழ் இயக்க பணிகளில் ஈடுபட்டார். இவரது ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்ட, 'மது அருந்துவோரை புறக்கணிக்கும் திட்டம்' சட்டசபையில் பாராட்டப்பட்டது.
இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றதால், பணிநீக்கம் செய்யப்பட்டார். பின், 'தமிழ் மண் பதிப்பகம்' துவங்கி, ஆபிரகாம் பண்டிதரின், 'கருணாமிர்த சாகரம், தமிழ் இசை களஞ்சியம், தமிழர் மருத்துவ களஞ்சியம்' உள்ளிட்ட அரிய நுால்களையும், சங்க இலக்கியங்கள், அகராதிகள், தமிழறிஞர்களின் நுால்களையும் திரட்டி தொகுப்புகளாக வெளியிட்டார்.
இவர், தன் 73வது வயதில், 2021 மே 4ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!