PUBLISHED ON : ஜூலை 28, 2025 12:00 AM

ஜூலை 28, 1982
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் , சாமிநாதன் - நாச்சம்மை தம்பதியின் மகனாக, 1908, ஜூன் 6ல் பிறந்தவர் கணேசன்.
இவர், காரைக்குடி ரெங்கவாத்தியார் திண்ணைப்பள்ளியில் படித்தார். வித்வான் சிதம்பர அய்யர், சேதுப்பிள்ளையிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் சமஸ்கிருதம், ஆங்கிலம் மொழிகளை கற்றார். மகாத்மா காந்தியின் முன்னிலையில் காங்கிரசில் இணைந்து, தொண்டர் படை தலைவரானார். நாடு விடுதலைக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட தால், இவரது வீடு, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தன், 5,000 அரிய புத்தகங்களுடன் வெளியேறி, மாறுவேடம் அணிந்து, பலரையும் போராட துாண்டினார். பிரிட்டிஷ் அரசு, இவரை கண்டதும் சுட உத்தர விட்டதால், ராஜாஜி, இவரை சரணடைய வைத்தார். 18 மாத சிறை தண்டனையின் போது, கைதிகளுக்கு கம்பராமாயண வகுப்புகளை நடத்தினார்.
சுதந்திரத்துக்கு பின், ராஜாஜியுடன் இணைந்து, சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ.,வானார். கம்பன் கழகங்களை உருவாக்கி, கம்பராமாயணத்தை பதிப்பித்து பரவலாக்கினார். கவியரங்கம், பட்டிமன்றம் நடத்தி மக்களை நல்வழிப்படுத்தினார். மதுரை பல்கலையின், 'சிண்டிகேட், செனட்' உறுப்பினராக செயல்பட்டார்.  இவர், தன், 74ம் வயதில், 1982ல் இதே நாளில் மறைந்தார்.
'கம்பன் அடிப்பொடி'யின் நினைவு தினம் இன்று!

