PUBLISHED ON : ஆக 15, 2025 12:00 AM

ஆகஸ்ட் 15, 1900
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியின் மகனாக, 1900ல், இதே நாளில் பிறந்தவர் வேங்கட மகாலிங்கம் எனும் பிச்சமூர்த்தி.
இவர், கும்பகோணத்தில் பள்ளி மற்றும் பட்டப் படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லுாரியில் படித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவரது தந்தை, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டிய மொழிகளில், சைவ சமய ஹரிகதா சொற்பொழிவுகளை நடத்தியவர்.
அதனால், இவருக்கும் எழுத்து, பேச்சு, ஆன்மிகத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது. 'பெட்டிக்கடை நாராயணன்' எனும் தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். தொடர்ந்து, 'நவ இந்தியா' பத்திரிகையில் பணியாற்றினார். இவரது படைப்புகள், 'சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி' உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியாகின.
ஆங்கிலத்திலும் சிறுகதைகளை எழுதினார். கவிதைகளிலேயே ஏழு குறுங்காவியங்களை தந்த இவர், தன் 76வது வயதில், 1976, டிசம்பர் 4ல் மறைந்தார்.
தமிழ் புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியின் பிறந்த தினம் இன்று!