PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

ஆகஸ்ட் 19, 1931
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கபிஸ்தலம் கிராமத்தில், கோவிந்தசாமி மூப்பனார் - செல்லத்தம்மாள் தம்பதிக்கு மகனாக, 1931ல், இதே நாளில் பிறந்தவர் கருப்பையா மூப்பனார். 6,000 ஏக்கருக்கு பண்ணையாரான இவரது பெயரை சொல்ல விரும்பாத மக்கள், ஜி.கே.மூப்பனார் என அழைத்தனர்.
இவரது தந்தை காங்கிரசில் இருந்தார். ஜெயபிரகாஷ் நாராயணன், காமராஜரால் ஈர்க்கப்பட்டு, இவரும் காங்கிரசில் இணைந்தார். தொண்டர்களின் தோளில் கை போட்டு பழகி, காங்கிரசை பலப்படுத்தியதால், 1965ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தலைவர் ஆனார்.
கடந்த 1975ல் காமராஜரின் மறைவுக்கு பின், பிளவு பட்டிருந்த காங்கிரசை ஒருங்கிணைத்து, தமிழக தலைவரானார். தொடர்ந்து, கட்சியின் தேசிய பொதுச்செயலர் ஆனார். தமிழக சட்டசபை காங்., தலைவராக ஒரு முறையும், ராஜ்யசபா எம்.பி.,யாக நான்கு முறையும் பதவி வகித்தார்.
கடந்த 1996 சட்டசபை தேர்தலில், இவரது எதிர்ப்பை மீறி, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தார். இதனால், தமிழ் மாநில காங்கிரஸ் எனும் தனி கட்சி துவங்கி, சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் வென்று காட்டினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு, தன், 70வது வயதில், 2001, ஆகஸ்ட் 30ல் மறைந்தார்.
த.மா.கா., தலைவர் வாசனின் தந்தை பிறந்த தினம் இன்று!

