PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

அக்டோபர் 1, 1973
நாகப்பட்டினம் மாவட்டம், போலகம் என்ற ஊரில், ராமாமிருத அய்யர் -- யோகாம்பாள் தம்பதியின் மகனாக, 1890, செப்டம்பர் 26ல் பிறந்தவர் ராமசர்மன் எனும் பாபநாசம் சிவன்.
சிறுவயதில் தந்தையை இழந்ததால், திருவனந்தபுரத்தில் தாயுடன் குடியேறி, மலையாளம், சமஸ்கிருதம் படித்தார். தாய் மறைந்த பின், தஞ்சை மாவட்டம், பாபநாசத்துக்கு வந்தார். அங்குள்ள சிவன் கோவில் முன், தினமும் மனமுருகி பாடியதால், 'பாபநாசம் சிவன்' என அழைக்கப்பட்டார்.
இவர், வித்வான் நுாரணி மகாதேவ அய்யர், சாம்ப பாகவதர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர் உள்ளிட்டோரிடம் இசை கற்று, 1918ல் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில், தன் முதல் கச்சேரியை செய்தார்.
இவர் இயற்றிய, 'என்ன தவம் செய்தனை, நான் ஒரு விளையாட்டு பொம்மையா' உள்ளிட்ட கீர்த்தனைகள் புகழ்பெற்றவை. இவர், 1934ல், சீதா கல்யாணம் படத்துக்கு முதல் பாடலை எழுதினார். 'மன்மத லீலையை, ராதே உனக்கு' உள்ளிட்ட, 800க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர், அம்பிகாபதி, சிந்தாமணி, சிவகவி உள்ளிட்ட படங்களுக்கு இசையும் அமைத்தார்.
'பத்மபூஷண்' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், தன் 83வது வயதில், 1973ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!