PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

அக்டோபர் 11, 1902
பீஹார் மாநிலம், சரண் மாவட்டம், சிதாப்தியரா கிராமத்தில் ஹர்ஸ்தயாள் -- புல்ராணி தேவி தம்பதியின் மகனாக, 1902ல் இதே நாளில் பிறந்தவர் ஜெயபிரகாஷ் நாராயண்.
பாட்னா கல்லுாரியில் படித்த போது, பாபு ராஜேந்திர பிரசாத்தின் தொடர்பால் அரசியலில் ஈடுபட்டார். தன் மனைவியை கஸ்துார்பா காந்தியின் ஆசிரம சேவைக்கு அனுப்பிவிட்டு, அமெரிக்காவில் சமூகப்பணி துறையில் பட்டம் பெற சென்றார். அங்கு, கார்ல் மார்க்சின் நுால்களை படித்து, பொதுவுடைமை சிந்தனைகளுடன் நாடு திரும்பினார்.
காந்தியுடன் விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றார். சுதந்திரத்துக்கு பின், பிரதமர் நேரு வற்புறுத்தி பதவிகள் தந்தபோதும் ஏற்க மறுத்தார். நேரு மறைவுக்கு பின் கிடைத்த பிரதமர் பதவியையும் விரும்பாத இவர், வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்திற்காக உழைத்தார்.
பிரதமர் இந்திரா அமல்படுத்திய நெருக்கடி நிலைக்கு எதிராக, பல கட்சிகளை இணைத்து, ஜனதா கட்சியை உருவாக்கி, 1977 லோக்சபா தேர்தலில் காங்கிரசை தோற்கடித்தார். இவர், தன் 77வது வயதில், 1979 அக்டோபர் 8ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!