PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

அக்டோபர் 19:
நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், வெங்கட்ராமன் பிள்ளை - அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாக, 1888ல், இதே நாளில் பிறந்தவர் ராமலிங்கம் பிள்ளை.
திருச்சியில் பி.ஏ., படித்த இவர், நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகவும், பின், தொடக்க கல்வி ஆசிரியராகவும் பணியாற்றினார். காங்கிரசில் இணைந்து, காந்தியின் அஹிம்சை கொள்கைகளை ஏற்றார்.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திற்காக, தமிழர்களை இணைக்கும் வகையில், 'கத்தியின்றி ரத்தமின்றி' என்ற பாடலை எழுதினார். போராட்டத்தில் பங்கேற்றதற்காக, ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். காங்கிரஸ் கட்சியின் கரூர், நாமக்கல் வட்டார தலைவராக பணியாற்றினார்.
இவரது, மலைக்கள்ளன் நாவல், எம்.ஜி.ஆர்., நடிப்பில் திரைப்படமானது. 'தமிழனென்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா' என்ற இவரது வாசகம் புகழ்பெற்றது. தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர், மேலவை உறுப்பினர், சாகித்ய அகாடமியின் தமிழ் பிரதிநிதி உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
பத்மபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற இவர், தன் 83ம் வயதில், 1972, ஆகஸ்ட் 24ல் காலமானார். சென்னை தலைமை செயலகத்தின், 10 மாடி கட்டடத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
'நாமக்கல் கவிஞர்' பிறந்த தினம் இன்று!