PUBLISHED ON : நவ 25, 2025 12:00 AM

நவம்பர் 25:
திருவாரூரில், பெருமாள் பிள்ளை - ஆனந்தவல்லி தம்பதியின் மகனாக, 1956ல் இதே நாளில் பிறந்தவர் திருவாரூர் பக்தவச்சலம்.
இவர், தன் தாயிடம் கர்நாடக சங்கீதத்தையும், தாய்மாமா திருவாரூர் கிருஷ்ணமூர்த்தியிடம் மிருதங்கம், இரட்டை தலை மேள வாசிப்பையும் கற்றார். தன் 9வது வயதில், தாயின் கச்சேரிகளுக்கு வாசிக்க துவங்கிய இவர், 16வது வயதில் சென்னையில் குடியேறினார்.
சென்னையின் அனைத்து சபாக்களிலும், முன்னணி வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், வீணை, வயலின் இசை கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்க துவங்கினார். தனித்த தஞ்சாவூர் பாணி வாசிப்பால், சென்னை அகில இந்திய வானொலியின், 'ஏ கிரேடு' கலைஞரானார்.
பாரம்பரிய இசையை மேம்படுத்த, 'டிவைன் என்செம்பிள்' குழுவையும், லய மதுரா இசை பள்ளியையும் நடத்துகிறார்.
திருவாரூர் தியாகராஜர் கோவில், காஞ்சி மும்மூர்த்தி ஜெயந்தி உள்ளிட்ட விழாக்களில் வாசித்து வருகிறார். நான்கு தலைமுறை கலைஞர்களுக்கு, 60 ஆண்டுகளாக மிருதங்கம் வாசிக்கும் இவர், 'சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி, சங்கீத கலாநிதி' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது, 69வது பிறந்த தினம் இன்று!

