PUBLISHED ON : டிச 27, 2025 03:26 AM

டிசம்பர் 27:
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில், 1956, மே 17ல் பிறந்தவர் மோகன்.
புதுக்கோட்டையில் படித்த இவர், நடிகராகும் விருப்பத்தில் சென்னை வந்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றினார்.
நாடக இயக்குநரும், எழுத்தாளருமான கிரேசி மோகன், 1979ல், 'கிரேசி கிரியேஷன்ஸ்' என்ற நாடக கம்பெனியை துவக்கினார்.
அவருடன் இணைந்த இந்த மோகன், 'மர்மதேசம், மாது பிளஸ் 2, மதில் மேல் மாது, ரிடர்ன் ஆப் கிரேசி தீவ்ஸ், ஜுராசிக் பேபி, மேரேஜ் மேட் இன் சலுான்' உள்ளிட்ட ஏராளமான நாடகங்களில் நடித்தார். பல நாடகங்களில் இவருக்கு, 'சீனு' என்ற பெயரே சூட்டப்பட்டதால், 'சீனு மோகன்' என்றே அழைக்கப்பட்டார்.
வருஷம் 16, அஞ்சலி, தளபதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேடை நாடகங்களில் மும்முரமானதால், நீண்ட இடைவேளைக்கு பின், விசில், இறைவி, ஆண்டவன் கட்டளை, மெர்சல், ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். கிரேசி மோகனின் வலதுகரமாக செயல்பட்ட இவர், தன் 62வது வயதில், 2018ல், இதே நாளில் மாரடைப்பால் காலமானார்.
இவரது நினைவு தினம் இன்று!

