PUBLISHED ON : டிச 29, 2025 01:26 AM

டிசம்பர் 29, 2009
மதுரை தமிழ் சங்கத்தின் செயலர் பழனியப்பன் - பிரமு தம்பதியின் மகனாக, 1946, நவம்பர் 26ல் பிறந்தவர், பழ.கோமதிநாயகம்.
இவர், மதுரை தியாகராஜர் கல்லுாரியில் பி.இ., அண்ணா பல்கலையில் நீரியல் சார்ந்த எம்.இ., அமெரிக்காவின் கொலராடோ, ஊட்டா பல்கலைகளில் நீரியல் பட்டய படிப்பில் சான்றிதழ்கள் பெற்றார். தமிழக பொதுப்பணித் துறையில், 34 ஆண்டுகள் பணியாற்றினார்.
திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் அண்ணா பல்கலை நீர்வள மையம் உள்ளிட்டவற்றில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 'தமிழர் பாசன வரலாறு, பெரியாறு அணை மறைக்கப்பட்ட உண்மைகள், மண்ணை அளந்தவர்கள், தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை, நீரின்றி அமையாது நிலவளம்' உள்ளிட்ட, 17 ஆய்வு நுால்களை எழுதினார்.
தமிழக ஏரி, குளங்களின் தற்கால நிலை, ஆறுகளில் கலக்கும் சாயக்கழிவு, மணல் கொள்ளை, உரிமைப் பிரச்னைகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து, கருத்தரங்கம் வாயிலாக, அரிய தகவல்களை வெளிப்படுத்தினார். தமிழக நீர்வளம் மற்றும் பாசன வடிவமைப்பு பிரிவின் தலைமை பதவியில் இருந்த போது, விருப்ப ஓய்வு பெற்றார். இவர், தன் 63வது வயதில், 2009ல், இதே நாளில் மறைந்தார்.
தன் ஆய்வுகளால், 'பழந்தமிழரின் பாசனக் கட்டுமானங்களே உலகின் முன்னோடி' என்பதை நிரூபித்த பொறியாளரின் நினைவு தினம் இன்று!

