PUBLISHED ON : டிச 31, 2025 02:39 AM

டிசம்பர் 31: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில், ராஜா நாயுடு - நாகலட்சுமி தம்பதியின் மகனாக, 1910ல், இதே நாளில் பிறந்தவர் டி.எஸ்.துரைராஜ்.
பட்டுக்கோட்டையில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். இவரது அக்காவுக்கு திருமணம் முடிந்து, மதுரை செல்லவே, அவருக்கு துணையாக அங்கு சென்ற இவர், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் கோமாளி, பெண் வேடங்களில் பாடி, நடித்தார். பின், இலங்கைக்கு சென்று, அங்கு நாடகங்களை நடத்தினார்.
'மதுரை ஒரிஜினல் மணிவாசக பால சபா' என்ற நாடக நிறுவனத்தையும் நடத்தினார். திருநீலகண்டர், சகுந்தலை, காரைக்கால் அம்மையார், திரும்பிப்பார், நிச்சய தாம்பூலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பல படங்களில், என்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து, நகைச்சுவையில் புகழ் பெற்றார்.
'மாஸ்டர்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனத்தை துவக்கி, பானை பிடித்தவள் பாக்கியசாலி, ஆயிரங்காலத்து பயிர் உள்ளிட்ட படங்களை இயக்கி, தயாரித்தார். இவர், தன் தங்கைக்கு அறிவுரை கூறுவதாக அமைந்த, 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே...' என்ற பாடல் பிரபலமானது. குதிரைகளை வளர்த்து, பந்தயங்களிலும் ஈடுபட்ட இவர், தன் 75வது வயதில், 1986, ஜூன் 2ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

