PUBLISHED ON : ஜன 22, 2026 04:13 AM

ஜனவரி 22:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், வேங்கடராம அய்யர் - லட்சுமி தம்பதிக்கு மகனாக, 1925ல் இதேநாளில் பிறந்தவர் கோபாலய்யர்.
இவர், திருவையாறு அரசர் கல்லுாரியில் புலவர் பட்டமும், மதுரை தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் பட்டங்களையும் பெற்றார். திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லுாரியில் தமிழ் பேராசிரியராகவும், திருவையாறு அரசர் கல்லுாரி முதல்வராகவும் பணியாற்றினார்.
மனப்பாடமாக சங்க இலக்கியங்களை கூறும் ஆற்றல் பெற்ற இவர், கல்லுாரி மாணவர் களுக்கு புத்தகத்தைப் பார்க்காமல் அவற்றையும், தொல்காப்பியத்திற்கான பலரின் உரைகளையும் கூறி, புரியும்படி கற்பித்தார்.
ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளையும் அறிந்த இவர், புதுச்சேரி பிரெஞ்சு - இந்திய ஆய்வு நிறுவனத்தில் பதிப்பாளராகவும் பணியாற்றினார். ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றான, 'மணிமேகலை'யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தா ர்.
பெரியபுராணம், கம்பராமாயண தொடர் சொற்பொழிவாற்றினார். தமிழக அரசின் 'திரு.வி.க., கபிலர்' விருதுகளைப் பெற்ற இவர் தன், 82வது வயதில் 2007, ஏப்ரல் 1ம் தேதி மறைந்தார்.
இவரது, 101வது பிறந்த தினம் இன்று!

