PUBLISHED ON : ஜன 30, 2026 04:20 AM

ஜனவரி 30:
திருநெல்வேலி மாவட்டம், வாழவந்தாள்புரம் எனும் கிராமத்தில், படிக்க ராமர் - வாழவந்தம்மை தம்பதியின் மகனாக, 1927ல் இதே நாளில் பிறந்தவர், கிருஷ்ணன் எனும் இளங்குமரன்.
இவர், பள்ளி பருவத்திலேயே சொற்பொழிவாற்றுவதிலும், பாடல் இயற்றுவதிலும் வல்லவராக இருந்தார். மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில், 'குண்டலகேசி' எனும் காவியத்தை அரங்கேற்றினார். சென்னை பல்கலையில் புலவர் பட்டம் பெற்று, தமிழாசிரியராக பணியாற்றினார்.
இவர் எழுதிய, 'திருக்குறள் கட்டுரை தொகுப்பு' நுாலை முன்னாள் பிரதமர் நேருவும், 'சங்க இலக்கிய வரிசையில் புறநானுாறு' நுாலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் வெளியிட்டனர்.
திருக்குறள் சொற்பொழிவுடன், தமிழ் முறைப்படி திருமணம், புதுமனை புகுவிழா, மணிவிழா ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார். நுாற்றுக்கணக்கான தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வு நுால்களை எழுதினார்; அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
'செந்தமிழ் அந்தணர், தமிழ்ச்செம்மல்' மற்றும் தமிழக அரசின் திரு.வி.க., விருதுகளை பெற்றவர், தன், 94வது வயதில், 2021 ஜூலை 25ல் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!

