PUBLISHED ON : மார் 29, 2026 03:17 AM

மார்ச் 29: செங்கல்பட்டு மாவட்டம், பாலுாரில், துரைசாமி - மாணிக்கம்மாள் தம்பதியின் மகனாக, 1908, டிசம்பர் 14ல் பிறந்தவர், பாலுார் து.கண்ணப்பன்.
இவர், மே.வீ.வேணுகோபாலனார், கோ.வடிவேலர், சூளை வைத்தியலிங்கனார் உள்ளிட்டோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், என்.சேஷாசலம் என்பவரிடம் ஆங்கிலத்தையும் கற்று, வித்வான், எம்.ஏ., பட்டங்களை பெற்றார்.
சென்னை லுாதரன் மிஷன், முத்தியால்பேட்டை, திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும், புது கல்லுாரியில் தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றினார்.
'சங்ககால வள்ளல்கள், தமிழ் புலவர் அறுவர் வரலாறு' உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நுால்களை எழுதினார்.
இவரது சைவ, தமிழ் தொண்டை பாராட்டி, 'செந்தமிழ்ச்செல்வர், சைவ சமய சிரோமணி' உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இவர் தன், 63வது வயதில், 1971ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

