PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

மே 26: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, சின்னசாமி பிள்ளை - நாகம்மாள் தம்பதியின் மகனாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் புத்தன்சந்தையில், 1891, செப்டம்பர் 15ல் பிறந்தவர், செண்பகராமன் பிள்ளை.
சிறு வயதிலேயே சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்டவற்றை கற்ற இவர், பள்ளியில் படித்தபோதே, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்' என்ற அமைப்பை துவக்கி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.
இத்தாலி, ஸ்விட்சர்லாந்த் பல்கலைகளில் இன்ஜினியரிங் மற்றும் பிஎச்.டி., படித்த இவர், ஜெர்மனி தலைநகர் பெர்லினில், 'இந்திய சர்வதேசக் குழு'வை நிறுவி, 'ப்ரோ இந்தியா' என்ற இதழையும் நடத்தினார். முதலாம் உலக போர் சமயத்தில், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாருக்கு நெருக்கடி தரும் வகையில், ஜெர்மனியின், 'எம்டன்' கப்பலில் பணியில் சேர்ந்து, சென்னை துறைமுகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை மீது பீரங்கி தாக்குதல் நடத்தினார்.
இந்தியர்களை தரம் தாழ்ந்து விமர்சித்த ஹிட்லரை, எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வைத்ததால், நாஜி படையினரால் உணவில் விஷம் கலக்கப்பட்டு, தன் 42வது வயதில், 1934ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
