PUBLISHED ON : மே 31, 2026 12:14 AM

மே 31:
தென்காசி மாவட்டம், குறும்பலாப்பேரியில், புலவர் மதன பாண்டியன் - ரத்தினமணி தம்பதியின் மகனாக, 1934, மார்ச் 8ல் பிறந்தவர், மதனபாண்டியன் லெனின் தங்கப்பா எனும் ம.லெ.தங்கப்பா.
பாளையங்கோட்டை துாய யோவான் கல்லுாரியில், தமிழில் எம்.ஏ., பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவர், புதுச்சேரியில் பல்வேறு கல்லுாரிகளில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
ரவீந்திரநாத் தாகூர், பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல், நல்வாழ்வு, மனிதநேயம் உள்ளிட்ட கருத்துகளில் கவிதை, குழந்தை பாடல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நுால்களை எழுதினார்.
சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் எழுதிய, 'சோளக்கொல்லை பொம்மை' என்ற நுாலுக்காக சாகித்ய புரஸ்கார் விருதையும், 'லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்' என்ற ஆங்கில நுாலுக்காக சாகித்ய அகாடமி விருதையும் பெற்றார்.
மேலும், பாரதிதாசன் விருது, சிற்பி இலக்கிய விருது உள்ளிட்டவற்றையும் பெற்ற இவர், தன் 84வது வயதில், 2018ல் இதே நாளில் மறைந்தார். இவரது உடல், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தானமளிக்கப்பட்டது.
இவரது நினைவு தினம் இன்று!
