PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

ஜூன் 21:
இந்திய விமானப்படையின், 'ஏர் மார்ஷல்' சிம்ஹகுட்டி வர்த்தமான் என்பவரது மகனாக, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பணமூரில், 1983ல் இதே நாளில் பிறந்தவர் அபிநந்தன் வர்த்தமான். திருப்பூர் மாவட்டம், அமராவதிநகர் சைனிக் பள்ளி, தேசிய பாதுகாப்பு அகாடமிகளில் படித்தார்.
இந்திய விமானப்படையில் அதிகாரியாக சேர்ந்து, தன் திறமையால், 'விங் கமாண்டர், குரூப் கேப்டன்' பதவிகளுக்கு உயர்ந்தார். 2019, பிப்ரவரி 27ல், நம் வான் எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின், 'எப் - 16' போர் விமானத்தை, நம், 'மிக் - 21' போர் விமானத்தால் அபிநந்தன் வழிமறித்து சுட்டு வீழ்த்தினார்.
பாகிஸ்தான் இவரது விமானத்தை ஏவுகணையால் தாக்கியது. தாக்கப்பட்ட விமானத்திலிருந்து, அவசர வெளியேற்ற அமைப்பை பயன்படுத்தி பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குதித்த இவரை, போர் கைதியாக பாகிஸ்தான் ராணுவம் பிடித்து சித்ரவதை செய்தது. அப்போது, அமைதியால் தன் உறுதியை வெளிப்படுத்தினார்.
மத்திய அரசின் ராஜதந்திர முயற்சியால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். சாகசத்துக்கான, 'வீர் சக்ரா, பகவான் மகாவீர் அகிம்சா புரஸ்கார்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவருக்கு, இன்று 43வது பிறந்த தினம்!
